Pages

Saturday, 2 July 2011

நபிமார்கள் மீது மூன்று வகையான பணிகள் சுமத்தப்பட்டிருந்தன

01) அல்லாஹூத்தஆலாவை ஏற்றுக் கொண்டு, அவனுக்கு மட்டும் கட்டுப்பட்டு வாழ்வதின் பால் அழைத்தல்.

02) அல்லாஹூத்தஆலாவின் விருப்பு, வெறுப்புக்களை (சட்டங்களை) மனிதர்களுக்கு எத்திவைத்து அதை நடைமுறைப்படுத்த முயற்சித்தல்.

03) அல்லாஹூத்தஆலா இறக்கிய சட்டங்களைக் கொண்டு ஒரு தலைமையின் கீழ் ஒன்றிணைந்த சமூக அமைப்பொன்றை உருவாக்குதல்.

முதல் பணியானது அனைத்து நபிமார்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்ததை பின்வரும் அல்-குர்ஆன் வசனம் உணர்த்துகின்றது.

' என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை, என்னை மட்டுமே வணங்குங்கள் என்று அறிவிக்கப்படாமல் உமக்கு முன்னர் எந்தத் தூதரையும் நாம் அனுப்பியதில்லை' (அல்- அன்பியா : 25)

அல்லாஹ்வின் விருப்பு வெறுப்புக்களை மனிதர்களுக்கு எத்திவைத்து அதை நடைமுறைப்படுத்தல் என்ற பணியைப் நிறைவேற்றும் பொருட்டே அல்லாஹூத்தஆலா சில நபிமார்களுக்கு வேதங்களையும், இன்னும் சிலருக்கு ஸூஹூபுகளையும், சிலருக்கு அவையிரண்டையும் இறக்கியருளினான். இவை வழங்கப்படாத நபிமார்களுக்கு முன்னைய நபிமார்களின் சரீஅத்தை பின்பற்றுவதும், போதிப்பதும், நடைமுறைப்படுத்துவதும் கடமையாக இருந்தது. ' உங்களிலுள்ள அனைவருக்கும் ஒரு சட்ட ஒழுங்கையும், பாதையையும் ஆக்கித் தந்தோம்' ( அல்- மாஇதா : 48) என்ற வசனம் நபிமார்கள் ஏதோ ஒரு வகையில் இரண்டாவது பணியை பொறுப்பாக்கப்பட்டிருந்தனர் என்பதை தெளிவுபடுத்துகின்றது.

மூன்றாவது பொறுப்பை – (ஒரு தலைமையின் கீழ் சமூக அமைப்பொன்றை உருவாக்குதல்) அல்லாஹூத்தஆலா எல்லா நபிமார்களுக்கும் விதியாக்கினானா? என்பதை அல்-குர்ஆனோ ஹதீஸ்களோ தெளிவாகக் குறிப்பிடவில்லை. ஆனால் இப்பொறுப்பு நபிமார்களில் சிலருக்கு கடமையாக்கப்பட்டிருந்தததை நாம் அல்-குர்ஆன் கூறும் நபிமார்களின் கதைகளிலிருந்து விளங்கிக் கொள்கிறோம்.

இப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட நபிமார்களில் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முக்கியமானவர்கள். ஏகத்துவத்தை எத்திவைப்பதோடு, பிர்அவ்னின் அடிமைத்தனத்திலிருந்து பனூ இஸ்ரவேலர்களை விடுவித்து, அவர்களை ஒரு சமூகமாக்கி, சமூக அமைப்பை ஏற்படுத்துவதற்காக அச்சமூகத்திற்கு ஹிஜ்ரத்தை விதியாக்கி, சமூக அமைப்பை பாதுகாப்பதற்காக ஜிஹாதையும் கடமையாக்கி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தூதுத்துவத்தை பூமியில் மேலோங்கச் செய்கின்ற பணியை அல்லாஹூத்தஆலா அவர்கள் மீது சுமத்தியிருந்தான் என்பதை அவர் பற்றிய அல்-குர்ஆன் வசனங்கள் விளக்குகின்றன.

'எமது அத்தாட்சிகளைக் கொண்டு மூஸாவை பிர்அவ்னிடமும், அவனது கூட்டத்தாரிடமும் அனுப்பினோம். அவர் அவர்களிடம் நான் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதர் என்று கூறினார்' (சுஹ்ருப் : 46) என்ற வசனம் எத்திவைத்தல் என்ற பொறுப்பை மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செய்த விதம் பற்றி பேசுகின்றது.

'நாம் மூஸாவுக்கு வேதத்தை வழங்கி அவருக்குத் உதவியாளராக அவரது சகோதரர் ஹாரூனையும் ஆக்கினோம்' (புர்கான் : 35) என்ற வசனம் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஷரீஅத் வழங்கப்பட்டமையையும், அதை நடைமுறைப்படுத்துவதில் உதவி செய்ய ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களை உதவியாளராக ஆக்கியதையும் உணர்த்துகின்றது. இவ்வசனத்தில் அல்லாஹூத்தஆலா ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் குறிக்க 'வஸீர்' என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளமை அவதானிக்கத்தக்கது. இச் சொல் சமகாலத்தில் அமைச்சர் என்ற அர்தத்தில் பயன்படுத்தப்படுகின்ற போதிலும் ஒரு விடயத்தைச் செயற்படுத்துவதில் இன்னொருவருக்கு உதவியாளராக இருத்தல் என்ற கருத்திலேயே ஆரம்ப காலத்தில் பயன்படுத்தப்பட்டது. எனவே ஏகத்துவத்தை எத்திவைத்தல் மட்டுமன்றி ஷரீஅத்தை சமூகத்தில் நடைமுறைப்படுத்தல் என்ற பொறுப்பும் மூஸா அலைஹிஸ்ஸலாம் மீது சுமத்தப்பட்டிருந்தமையை இவ்வசனம் சுட்டிக்காட்டுகின்றது.

'முன்னரும் நாம் வேதனைப் பட்டோம். நீர் அனுப்பப்பட்ட பின்னரும் நாம் வேதனைக்குள்ளாக்கப்படுகின்றோம் என்று பனூ இஸ்ரவேலர்கள் சொன்ன போது, மூஸா 'உங்களின் இரட்சகன் உங்கள் எதிரிகளை அழித்து உங்களைப் பூமியின் பிரதிநிதிகளாக்கி பின்னர் நீங்கள் எவ்வாறு செயற்படுகின்றீர்கள் என்பதை அவதானிக்கக் கூடும்' (அஃராப் :128). இவ்வசனம் மூஸா அலைஹிஸ்ஸலாம் பனூ இஸ்ரவேலர்களை சமூக உருவாக்கப் பணிக்காக அழைத்துச் சென்ற சமயம் அச் சமூகம் பொறுமையிழந்த போது கூறப்பட்ட ஆறுதல் வார்த்தைகள் என்பதை பர்சான் நாநா நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இதன் மூலம் நாம் விளங்கிக் கொள்வதென்னவென்றால் நபிமார்களின் தஃவா - எத்திவைத்தல், அல்லாஹ்வின் விருப்பு வெறுப்புக்களை மக்களுக்கு கற்றுக் கொடுத்து, நடைமுறைப்படுத்தல், அந்த சட்டங்களின் அடிப்படையில் ஒரு தலைமைத்துவத்தின் கீழான சமூக அமைப்பொன்றை உருவாக்கல் என்பவற்றை உள்ளடக்கியிருந்தது என்பதாகும். இதில் மூன்றாவது பொறுப்பு குறிப்பிட்ட சில நபிமார்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருந்தது, ஏனைய இரு பொறுப்புக்களும் எல்லா நபிமார்களுக்கும் விதியாக்கப்பட்டிருந்தது. (Islamicuprising)

Home        Sri Lanka Think Tank-UK (Main Link)

No comments:

Post a Comment