Pages

Thursday, 7 July 2011

நபிகளும் கல்வியும்

1/
நவீன கல்வித் திட்டத்தைக் கற்ற யாரும் முன்னெப்போதையும் விட அது வளர்ச்சியடைந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. நாளைய மனிதனை உருவாக்குவதில் அதன் வழிமுறைகள் விருத்தியடைந்துள்ளதை யாரும் ஏற்காமலிருக்க முடியாது. கல்வியாளர்களும் உளவியலாளர்களும் அதற்காகப் பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர். இப்பின்புலத்தில் நபிகளின் கல்வி குறித்த பார்வை தனித்துவப்படுவதையும் காலத்திற்கேற்ப நெகிழ்வுத் தன்மையுடன் பொருந்திப் போவதையும் அதேநேரம் அது குறித்து கேள்வி எழுப்புவதையும் காண முடியும். ‘அறிவு காணாமல் போன பொருள்’ என நபிகள் பிரகடனம் செய்கிறார். ‘அதை இடயறாது தேடுவதே மனிதனின் பணி’ எனக் கூறுகிறார். அதேநேரம் இன்றைய கல்வி முறையில் பின்வரும் விடயங்களை நாம் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.

கல்வித்திட்ட வழிமுறைகளில் பிரதான அம்சம் அவற்றின் நோக்கமேயாகும். அதாவது கல்வியின் நோக்கம் யாது? கல்வித் திட்ட வழிமுறையூடாக எந்த வகையான மனிதர்களை உருவாக்க விரும்புகின்றோம்? மேற்குலக நோக்குமுறையிலிருந்து நபிகளின் நோக்குமுறை எவ்வாறு வேறுபடுகின்றது. இயந்திரமயமான மேற்கத்திய நோக்குமுறை நபிகளின் கல்வியில் கிடையாது. அவரது கல்வி வாழ்க்கையிலிருந்து பிறக்கின்றது. மனிதனின் வாழ்க்கை சார்ந்த ஞான தேடலிலிருந்து ஆரம்பமாகின்றது. தன்னிலை, சமூகம் போன்ற சமூக ஊடாட்டத்தோடு அக்கல்வி பிறக்க வேண்டுமென நபிகள் நாடுகிறார். தன்னிலையாகவும் மற்றமைகளையும் பாதிப்பை செலுத்தக்கூடிய உற்பத்தி நாட்டம் கொண்ட தேடலுள்ள மனிதனையே நபிகளின் கல்வி உருவாக்க விரும்புகின்றது.

நபிகளின் கல்வியில் அடுத்த சிறப்பம்சங்களில் ஒன்று அதன் பரிபூரணத் தன்மையாகும். வாழ்வின் சகல அம்சங்களையும் உற்கொண்ட கல்வியாக அது அமைகிறது. நபிகளின் கல்வி ஒரு மதக்கல்வி அல்ல. உடல், தொழில், மொழி, இலக்கிய, பாலியல், சமூகவியல், ராணுவ, வணிக, அரசியல் என கல்விக்கான களங்களைக் கொண்டதாக பரிமானங்களை அடைந்துள்ளது. பண்பாட்டுக் கல்வி, அழகியற் கல்வி போன்ற விரிந்த கல்வித்துறைகளுடன் இணைந்த ஒன்றாகத்தான் நபிகளின் கலவியை ஆராய வேண்டும். இவை ஒவ்வொன்றுடனும் ஒன்று கலந்து ஊடுபாவி முழுமையான ஆளுமை படைத்த மனிதனை நபிகளின் கல்வி உருவாக்க விரும்புகின்றது.

நபிகளின் கல்விக் கோட்பாட்டில் கலைத்திட்டம், வழிமுறைகள், பாடநூல்கள் போன்றவையும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால் அவற்றைவிட ஆசிரியர், மாணவர் உறவையே செயலூக்கமுள்ள சக்தியாக நபிகள் கணித்துள்ளார்.

நபிகளின் கல்வியில் கல்வி வழங்கும் நிறுவனமோ, இடமோ மட்டும் கல்விக்கு பொறுப்பானதென்று அவர் கருதவில்லை. கல்விச் சமூகத்தையும் அவர் உருவாக்க அதனோடு இணைத்துக் கொள்ள விரும்பியுள்ளார். குடும்பம், சமூகம், ஊடகம் என கல்வி நிறுவனத்திற்கு வெளியே இருக்கின்ற அத்தனை அமைப்புக்களும் அதற்குப் பங்காற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றார்.

சமாதானக் கல்வி

நபிகளின் கல்விக் கோட்பாட்டில் சமாதானக் கல்விக்கும் பெரியதொரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மனிதனுக்கு சமாதானம் தேவையாகும். சமாதானம் இன்றி மனிதனால் வாழ முடியாது. விடுதலைப் போராட்டமாயினும் தற்காப்புப் போராயினும் அதை ஒரு கட்டத்தில் ஓயவைத்தே ஆகவேண்டும். நபிகள் பேராட்டங்களின் பின் சமாதானப் பேச்சுக்களிலேயே அதிகம் ஈடுபட்டுள்ளார். யுத்தம் முதலில் ஊற்றெடுப்பது மனித உள்ளத்திலாகும். அற்ப பிரச்சினைகளுக்கு சதா போரிட்டுக் கொண்டிருந்த பழங்குடிச் சமூகத்தில் நபிகள் சமாதானக் கல்வி மூலமே தனது சமூகமாற்றப் பணியை தொடக்கிவைத்தார். எனவே அவர் சமாதானத்தின் அடித்தளத்தை உள்ளத்திலேயே அமைக்க வேண்டும் என பாடுபட்டார். ஆகிரமிப்பு மனோபாவம் வன்முறைக்கு இட்டுச் செல்லும் மனித ஆற்றலை சமாதான வழியில் செலுத்துவதற்கு நபிகள் அறிமுகப்படுத்திய கல்வி முறை பொருத்தமாக அமைந்துள்ளது. உள்ளத்தில் எழும் மோதலை தனிப்பதன் மூலம் உள்ளத்தில் சமாதானத்தைத் தோற்றுவிக்கலாம் என்ற உண்மையை நபிகள் தனது வாழ்வில் நிரூபித்துக் காட்டினார். உள்ளத்திற்கும் அறிவுக்கும் இடையே நிலவும் இந்த மோதுகையை அல்லது இயல்பூக்கத்திற்கும் உள்ளத்திற்கும் இடையே நிலவும் மோதுகையைத் தவிர்ப்பதன் மூலம் முதலில் உள அமைதியைத் தோற்றுவிக்கலாம் என்று நபிகள் உறுதியாக நம்பினார். சமூகப் பொருளாதார ஒழுங்கமைப்புக்களால் சமாதானம் பாதிப்படைகிறது என்பதை மறுக்காமல் தன்னிலைகளின் உள்ளக்கிடக்கைகளையும் அபிலாஷைகளையும் புறந்தள்ளாமலும் நபிகள் சமாதானக் கல்வி மூலம் தீர்த்துவைத்தார். உள்ளத்தில் ஒரு பொருள் இருக்கிறது. அது சீர்பெற்றுவிட்டால் அனைத்தும் சீர் பெற்றுவிடும். அது கெட்டுவிட்டால் அனைத்தும் கெட்டுவிடும் என்ற நபிகளின் கூற்று மிகுந்த முக்கியத்துவமுடையதாகும். எனவே வறுமையும் வன்முறையும் நிலவும் சூழலில் ஒருவரின் அகத்துக்குள் பூரண சமாதானம் நிலவ முடியாது என்பதைப் போல இயற்கைச் சூழல் அழிப்பு யுத்தத்திற்குப் பழியாகும் போது சமாதானம் நிலவ முடியாது என்பதை நபிகள் தனது வாழ்நாளில் நிரூபித்துக் காட்டினார். நபிகள் அறிமுகப்படுத்திய சமாதனக் கல்வியின் நோக்கம் சமாதானமாக வாழக்கூடிய மனித சமூகமொன்றை உருவாக்குவதாகும். இனவன்முறைக்கும் பேரழிவுக்கும் பலியாகும் மனித சமூகத்தை விடுவிப்பதே நபிகளின் கல்வி முறையின் உன்னத நோக்கமாகும். உடலும் ஆன்மாவும் அறிவும் அழகியல் உணர்வும் உற்பத்தித் திறனும் கொண்ட நல்லடியார்களை உருவாக்குவதே அவரது இலட்சியமாக இருந்தது.

2/

நூற்றாண்டுகளாகப் பேராடி வாழ்ந்த அறபிகளை நபிகள் தனது சமாதானக் கல்வியூடாக ஒன்றுபடுத்தினார்கள். மிலேச்சத்தனமான, மிருகத்தனமான நடவடிக்கைகளை நிறுத்தினார்கள். யுத்தக் கைதிகளுக்கான விடுதலையாக கல்வியையே அறிமுகப்படுத்தினார்கள். சிறைவாழ்விலிருந்து விடுவிக்க கல்வி போதிப்பதை ஒரு புதிய தண்டனையாக அறிமுகப்படுத்தினார்.

இனக்குரோதம், இனவெறுப்பு, வன்முறைப் பண்பிலிருந்து விலக்கி மனிதம் என்ற பண்பைக் கொண்டவர்களாக தனது தோழர்களை அவர் உருவாக்கினார். ஒரு தன்னிலை தன்னுடனும் சமூகத்துடனும் பிரபஞ்சத்துடனும் சமாதானமாக வாழக்கூடிய மோதல்களைத் தவிர்த்துக் கொள்ளக்கூடிய மனிதர்களைத்தான் அவர் தனது கல்வி முறையில் உருவாக்கினார். நபிகள் தனிநபர் உருவாக்கத்திலும் தனித்துவங்களின் உருவாக்கத்திலும் மிகப்பெரும் சாதனைகளை நிகழ்த்தினார்கள். அதியுயர் தனியாள் விறுத்தியின் ஊடாகத்தான் அவர் இந்தச் சமாதானக் கல்வியை வெற்றிகரமாக செயற்படுத்தினார்.

நபிகளின் சமாதனக் கல்வி உறைந்து போன, கலகப் பண்பில்லாத மாணவர் சமூகத்தை உருவாக்க விரும்பவில்லை. மோதுகை என்பது தனிமனிதனுக்கு, சமூக இயங்கியலுக்கு அத்தியவசியமானது. மனிதர்கள் இருக்குமிடத்தில் மோதலும் இருக்கும். சத்தியத்தின் மீது உண்மையான அறிவின் மீது அல்லது நீதிக்கும் சமாதானத்திற்குமான ஒரு குழு யுகம் முடியும் வரை நிலைத்திருக்கும் என்று நபிகள் குறிப்பிடுகின்றார். அதிகாரத்திடம் உண்மை பேசுவதே உயர்ந்த அறப்போர் என்று கூறி உயிர்ப்பு மிக்க புத்திஜீவிகளை உருவாக்கினார். உண்மை நீதி தெரிந்தும் அதை எடுத்துக் கூறாதவன் கெட்ட ஷைத்தான் என்று கண்டித்தார்.

நபிகளின் சமாதானக் கல்வி மாணவர்களை சுறுசுறுப்பாக மாற்றுகின்றது. கவனமாக செவிமடுத்தல், தமது உள்ளுணர்வுகளை தெளிவாக மற்றவர்களுக்கு எடுத்துரைத்தல், நேர்மையாக நடத்தல், எதிர்ப்பைத் தெரிவித்தல், தனக்காகவும் சமூகத்திற்காகவும் குரல் கொடுத்தல், பொறுப்புடன் காரியங்களை மேற்கொள்ளல், மோதல்களைத் தவிர்ப்பதில் விவேகமாகச் செயற்படல், சலாம் கூறுதல், கைளாகு செய்தல், ஆலிங்கனம் செய்தல், உபசரித்தல், நோய்விசாரித்தல், உரிமைகளைக் கொடுத்தல், கடமைகளை நிறைவேற்றல் என நபிகளின் சமாதானக் கல்வி உயிர்த்தன்மையுடன் திகழ்கின்றது.

பாடசாலைக் கல்வி

இன்றைய பாடசாலையின் சிறப்பம்சம் அது தரப்படுத்தப்பட்ட சீரான கல்வியை அனைவருக்கும் வழங்குகின்றது. ஒரு சமூகத்தை ஒரே விதமான கல்வியை வழங்கி தரப்படுத்துவதற்கு இதுவே சிறந்த வழியாகும். இன்றைய கல்வியில் முதல்தர நோக்கம் சமூக உருவாக்கமாகும். சீரான மதிப்பீடுகளும் சமூக பழக்க வழக்கங்களும் அடிப்படை நம்பிக்கைகளைக் கொண்ட சமூகம் ஒன்றை பயிற்றுவித்து எடுப்பதே இன்றைய கல்வியின் இலக்காக காணப்படுகின்றது. அவ்வாறே இன்றைய கல்வி ஜனநாயகத் தன்மை கொண்டதாக உள்ளது. அதனால் தரப்படுத்தப்பட்ட கல்வியையும் ஜனநாயகத்தையும் பிரித்துப்பார்க்க முடியாது. பல்வேறு சமூக, பொருளாதார, ஏற்றத்தாழ்வுகள் உள்ள குழந்தைகள் அனைவரும் சமம் என்ற மனநிலையைப் பெறுவது பள்ளிக்கூடத்தில்தான். ஆனாலும் இந்தக் கல்வி முறையில் சில அடிப்படைப் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. இது கல்வியின் பொதுத்தராதரத்தைக் குறிவைத்து இயங்குவதால் தனித்தன்மைகளை பொருட்படுத்துவதில்லை. சராசரிகளையே இது கணக்கிலெடுக்கின்றது. சராசரிகள் மூலம் தனித்துவங்களை நசுக்கிவிடுகின்றது. அனைவருக்குமாக வகுக்கப்பட்ட பாடத்திட்டத்தில் தனித்த தேடலும் ஐயங்களும் கொண்ட மாணவனின் ஆத்மா அவநம்பிக்கை கொள்கிறது. கல்வியை தனிமனிதனுக்கான அறிவுத்தேடலை நிறைவு செய்யும் வழிமுறை என எடுத்துக் கொண்டால் இந்தப் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வி முறை அவனுக்குப் பெரிதாக எதையும் கொடுப்பதில்லை. ஆரம்ப மொழிப்பயிற்சி வித்தியாசமான மனிதர்களுடன் பழகுவதற்கான சந்தர்ப்பம் போன்ற சில விசயங்கள் மாத்திரமே இன்றைய பாடசாலைக்கல்வியில் கிடைக்கின்றது.

குரு-சிஷ்ய கல்வி முறைக்கும் பாடசாலை கல்வி முறைக்குமிடையே பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஒரு குருவுடன் சேர்ந்து வாழ்ந்து மெல்ல மெல்ல அவர் அடைந்த மெய்ஞானத்தை அவரது ஆளுமையுடன் சேர்த்துப் பெற்றுக் கொள்வதே குரு-சிஷ்ய முறையில் கிடைக்கும் கல்வியாகும். ஆனால் பாடசாலை, கூட்டமாகச் சேர்ந்து ஏதேனும் ஒரு பாடத்தை ஒரேவிதமான முறையில் படிப்பதைக் குறிக்கின்றது. பள்ளிக்கூடத்திற்கும் குரு-சிஷ்ய முறைக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு இதுதான். பள்ளிக்கூடத்தில் பாடம் உள்ளது. ஆசிரியர் இல்லை. ஆசிரியர் அங்கு அப்பாடத்தை ஒலிக்கும் குரல் மட்டுமே. பள்ளியில் ஆசிரியருக்கும் மாணவனுக்குமிடையே தனிப்பட்ட உறவு கிடையாது. மாணவன் ஆசிரியருக்கு ஒரு சுட்டிலக்கம் மட்டுமே. எனவேதான் பெரும்பாலான ஆசிரியர்கள் மாணவர்களை நினைவில் வைத்துக் கொள்வதில்லை. பாடசாலை அல்லது நிறுவனக்கல்வி சிந்தனைகளைத்தான் கற்பிக்கின்றன. சிந்திப்பதற்குக் கற்பிப்பதில்லை.

ஆனால் நபிகளின் கல்வி அமைப்பில் ஆசிரியரும் மாணவனும் தனிப்பட்ட உறவுடன் உள்ளனர். இந்த உலகத்தில் உருவாகும் உறவுகளில் மிகவும் புனிதமானதும் உயிர்ப்புமிக்கதுமான உறவாக குரு-சிஷ்ய உறவே கருதப்படுகின்றது. அங்கு இருவருக்கும் தீராக்காதல் இருக்கும். எனவேதான் நபிகளிடம் கற்ற மாணவர்கள் அவரது மறைவுக்குப் பின்பும் தமது வாழ்நாள் பூராக நினைவூட்டிக் கொண்டே இருந்தார்கள். இங்கு நபிகள் என்ற குரு ஓர் ஆளுமையாக, முன்னுதாரணமாக அவரது தோழர்கள்-மாணவர்கள் முன் நின்கின்றார். தன்னையே அவர்களுக்கு பரிசாக அளிக்கின்றார். அவர்கள் ஆக விரும்பும் பிம்பம் அவருடைய இலட்சியமாகவும் கனவாகவும் அவராக இருக்கின்றது. கடமைக்காக கற்பிக்கும் ஆசிரியருக்கும் நபிகள் என்ற ஆசிரியருக்குமிடையில் நிறைய வித்தியாசம் இருக்கின்றது. நபிகள் அறிவை குறிப்பான பாடத்திட்டத்திற்குள் சுருக்கிக் கொள்ளவில்லை. அதை எப்போதும் தேடலுக்குரிய ஒன்றாகவே வைத்திருந்தார். நேற்று இன்று நாளை என்ற கால பரிமானத்தில் அறிவுற்பத்தியை அவர் ஊக்குவித்தார். அறிவில் யாரும் எந்நிலையிலும் தன்னிறைவு அடைய முடியாது என்பதையும் அவர் நம்பினார். எனவே கல்வியை குறிப்பிட்ட கட்டத்தோடு நிறுத்திவிடாது வாழ்நாள் பூராக கற்றல் என்ற சிந்தனையை முன்வைத்தார். சொற்ப அறிவே வழங்கப்பட்டுள்ளது. அறிவைப் பெருகச் செய்வாயாக என்ற புகழ்பெற்ற வாக்கியங்களை அவர் உச்சரிப்பவராக இருந்தார். (Idree Plus*)

Home         Sri Lanka Think Tank-UK (Main Link)

Saturday, 2 July 2011

நபிமார்கள் மீது மூன்று வகையான பணிகள் சுமத்தப்பட்டிருந்தன

01) அல்லாஹூத்தஆலாவை ஏற்றுக் கொண்டு, அவனுக்கு மட்டும் கட்டுப்பட்டு வாழ்வதின் பால் அழைத்தல்.

02) அல்லாஹூத்தஆலாவின் விருப்பு, வெறுப்புக்களை (சட்டங்களை) மனிதர்களுக்கு எத்திவைத்து அதை நடைமுறைப்படுத்த முயற்சித்தல்.

03) அல்லாஹூத்தஆலா இறக்கிய சட்டங்களைக் கொண்டு ஒரு தலைமையின் கீழ் ஒன்றிணைந்த சமூக அமைப்பொன்றை உருவாக்குதல்.

முதல் பணியானது அனைத்து நபிமார்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்ததை பின்வரும் அல்-குர்ஆன் வசனம் உணர்த்துகின்றது.

' என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை, என்னை மட்டுமே வணங்குங்கள் என்று அறிவிக்கப்படாமல் உமக்கு முன்னர் எந்தத் தூதரையும் நாம் அனுப்பியதில்லை' (அல்- அன்பியா : 25)

அல்லாஹ்வின் விருப்பு வெறுப்புக்களை மனிதர்களுக்கு எத்திவைத்து அதை நடைமுறைப்படுத்தல் என்ற பணியைப் நிறைவேற்றும் பொருட்டே அல்லாஹூத்தஆலா சில நபிமார்களுக்கு வேதங்களையும், இன்னும் சிலருக்கு ஸூஹூபுகளையும், சிலருக்கு அவையிரண்டையும் இறக்கியருளினான். இவை வழங்கப்படாத நபிமார்களுக்கு முன்னைய நபிமார்களின் சரீஅத்தை பின்பற்றுவதும், போதிப்பதும், நடைமுறைப்படுத்துவதும் கடமையாக இருந்தது. ' உங்களிலுள்ள அனைவருக்கும் ஒரு சட்ட ஒழுங்கையும், பாதையையும் ஆக்கித் தந்தோம்' ( அல்- மாஇதா : 48) என்ற வசனம் நபிமார்கள் ஏதோ ஒரு வகையில் இரண்டாவது பணியை பொறுப்பாக்கப்பட்டிருந்தனர் என்பதை தெளிவுபடுத்துகின்றது.

மூன்றாவது பொறுப்பை – (ஒரு தலைமையின் கீழ் சமூக அமைப்பொன்றை உருவாக்குதல்) அல்லாஹூத்தஆலா எல்லா நபிமார்களுக்கும் விதியாக்கினானா? என்பதை அல்-குர்ஆனோ ஹதீஸ்களோ தெளிவாகக் குறிப்பிடவில்லை. ஆனால் இப்பொறுப்பு நபிமார்களில் சிலருக்கு கடமையாக்கப்பட்டிருந்தததை நாம் அல்-குர்ஆன் கூறும் நபிமார்களின் கதைகளிலிருந்து விளங்கிக் கொள்கிறோம்.

இப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட நபிமார்களில் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முக்கியமானவர்கள். ஏகத்துவத்தை எத்திவைப்பதோடு, பிர்அவ்னின் அடிமைத்தனத்திலிருந்து பனூ இஸ்ரவேலர்களை விடுவித்து, அவர்களை ஒரு சமூகமாக்கி, சமூக அமைப்பை ஏற்படுத்துவதற்காக அச்சமூகத்திற்கு ஹிஜ்ரத்தை விதியாக்கி, சமூக அமைப்பை பாதுகாப்பதற்காக ஜிஹாதையும் கடமையாக்கி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தூதுத்துவத்தை பூமியில் மேலோங்கச் செய்கின்ற பணியை அல்லாஹூத்தஆலா அவர்கள் மீது சுமத்தியிருந்தான் என்பதை அவர் பற்றிய அல்-குர்ஆன் வசனங்கள் விளக்குகின்றன.

'எமது அத்தாட்சிகளைக் கொண்டு மூஸாவை பிர்அவ்னிடமும், அவனது கூட்டத்தாரிடமும் அனுப்பினோம். அவர் அவர்களிடம் நான் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதர் என்று கூறினார்' (சுஹ்ருப் : 46) என்ற வசனம் எத்திவைத்தல் என்ற பொறுப்பை மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செய்த விதம் பற்றி பேசுகின்றது.

'நாம் மூஸாவுக்கு வேதத்தை வழங்கி அவருக்குத் உதவியாளராக அவரது சகோதரர் ஹாரூனையும் ஆக்கினோம்' (புர்கான் : 35) என்ற வசனம் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஷரீஅத் வழங்கப்பட்டமையையும், அதை நடைமுறைப்படுத்துவதில் உதவி செய்ய ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களை உதவியாளராக ஆக்கியதையும் உணர்த்துகின்றது. இவ்வசனத்தில் அல்லாஹூத்தஆலா ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் குறிக்க 'வஸீர்' என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளமை அவதானிக்கத்தக்கது. இச் சொல் சமகாலத்தில் அமைச்சர் என்ற அர்தத்தில் பயன்படுத்தப்படுகின்ற போதிலும் ஒரு விடயத்தைச் செயற்படுத்துவதில் இன்னொருவருக்கு உதவியாளராக இருத்தல் என்ற கருத்திலேயே ஆரம்ப காலத்தில் பயன்படுத்தப்பட்டது. எனவே ஏகத்துவத்தை எத்திவைத்தல் மட்டுமன்றி ஷரீஅத்தை சமூகத்தில் நடைமுறைப்படுத்தல் என்ற பொறுப்பும் மூஸா அலைஹிஸ்ஸலாம் மீது சுமத்தப்பட்டிருந்தமையை இவ்வசனம் சுட்டிக்காட்டுகின்றது.

'முன்னரும் நாம் வேதனைப் பட்டோம். நீர் அனுப்பப்பட்ட பின்னரும் நாம் வேதனைக்குள்ளாக்கப்படுகின்றோம் என்று பனூ இஸ்ரவேலர்கள் சொன்ன போது, மூஸா 'உங்களின் இரட்சகன் உங்கள் எதிரிகளை அழித்து உங்களைப் பூமியின் பிரதிநிதிகளாக்கி பின்னர் நீங்கள் எவ்வாறு செயற்படுகின்றீர்கள் என்பதை அவதானிக்கக் கூடும்' (அஃராப் :128). இவ்வசனம் மூஸா அலைஹிஸ்ஸலாம் பனூ இஸ்ரவேலர்களை சமூக உருவாக்கப் பணிக்காக அழைத்துச் சென்ற சமயம் அச் சமூகம் பொறுமையிழந்த போது கூறப்பட்ட ஆறுதல் வார்த்தைகள் என்பதை பர்சான் நாநா நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இதன் மூலம் நாம் விளங்கிக் கொள்வதென்னவென்றால் நபிமார்களின் தஃவா - எத்திவைத்தல், அல்லாஹ்வின் விருப்பு வெறுப்புக்களை மக்களுக்கு கற்றுக் கொடுத்து, நடைமுறைப்படுத்தல், அந்த சட்டங்களின் அடிப்படையில் ஒரு தலைமைத்துவத்தின் கீழான சமூக அமைப்பொன்றை உருவாக்கல் என்பவற்றை உள்ளடக்கியிருந்தது என்பதாகும். இதில் மூன்றாவது பொறுப்பு குறிப்பிட்ட சில நபிமார்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருந்தது, ஏனைய இரு பொறுப்புக்களும் எல்லா நபிமார்களுக்கும் விதியாக்கப்பட்டிருந்தது. (Islamicuprising)

Home        Sri Lanka Think Tank-UK (Main Link)