Pages

Wednesday 10 August 2016

துருக்கி இராணுவப் புரட்சிகளும் அரசியற் சுயநலப் போக்கும்

1/2

2/2
இராணுவப் புரட்சிகள் பற்றி நான் வாசித்த நூல்களில் கலாநிதி ஜைனுத்தீன் ஹம்மாதின் “இராணுவப் புரட்சிகள் – திட்டமிடல், அமுலாக்கல், நிலைபெறல்” என்ற நூல் மிகவும் சுவாரஸ்யமானதாகும். “அரசியல் ஆய்வுக்கான எகிப்திய மத்திய நிலையம்” என்ற ஸ்தான்பூலிலுள்ள நிறுவனம் அதனை வெளியிட்டுள்ளது. “எவ்வாறு வெற்றிகரமான இராணுவப் புரட்சியை ஆக்கலாம்” என்ற தலைப்பில் அப் புத்தகத்தின் சுருக்கத்தை தனது இணையத் தளத்திலும் அந் நிறுவனம் தந்துள்ளது.

“இராணுவப் புரட்சிகளுக்கான சந்தர்ப்பங்கள்” என்ற அந்நூலின் ஓர் அத்தியாயம் குறிப்பாக என் கவனத்தை ஈர்த்தது. அந்த அத்தியாயம் இராணுவப் புரட்சிகளுக்கு உதவும் அரசியல், சட்ட சமூக சூழ்நிலைகளை விளக்குகிறது. ஆசிரியர் அவ்வத்தியாயத்தில் “அரசியல் சட்ட வாழ்வின் பலவீனம் அல்லது இன்மை என்பதுவே இராணுவப் புரட்சிகளுக்கு உதவும் முதல் சந்தர்ப்பம் என்கிறார். அதனை அவர் கீழ்வருமாறு விளக்குகிறார்.

நிலைபெற்ற ஜனநாயக சமூகங்களில் அரசு என்பதற்கான சட்டப்பொருள், அரசியல் தலைமைக்கான சட்டரீதியான அடிப்படை என்பவை பற்றிய விளக்கம் சமூகத்திற்கு மத்தியில் தொடர் மனப்பதிவுகாளாக ஆகிப் போயிருக்கும். அங்கே மக்கள் இராணுவப் புரட்சிகளை ஏற்க மாட்டார்கள். மக்கள் அங்கே சட்ட அடிப்படையைப் பற்றி நிற்பர். நிகழ்காலத் தலைமையை அவர்கள் வெறுத்தாலும் அதிகாரம் சமாதான வழியில் கைமாறும் பொறிமுறைகளை அவர்கள் கடைப்பிடிப்பர். ஆனால் இதற்கு நேர் எதிர்ப்புறத்தில் அதிகாரம் கைமாறுவதில் பலமும், வழக்காறும் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளில் மக்கள் இராணுவப் புரட்சிகளை மறுக்கவோ அதற்கெதிராகப் போராடவோ மாட்டார்கள் என்பது மட்டுமல்லாது பல சந்தர்ப்பங்களில் அதற்கு ஆதரவும் அளிப்பார்கள். 

தாம் இருக்கும் நிலையை விட உயர்ந்த ஒன்றைப் பெற்றுக் கொள்ள முடியுமோ என்ற எதிர்பார்ப்பில் இதனை அவர்கள் செய்வர். இராணுவப் புரட்சி மூலம் இலக்காகக் கொள்ளப்படும் தலைமைக்கும் மக்களுக்குமிடையிலான சட்ட ஒப்பந்த நிலை அறுந்து போவதுவும் அதன் விளைவாக மக்கள் மத்தியில் காணப்படும் அரசியல் விழிப்புணர்வு இன்மையுமே இராணுவப் புரட்சிகள் வெற்றிகரமாக நிகழ்வதற்கான முதல் ஷரத்தாகும். எந்த விசாரணையும், ஆட்சேபனையுமின்றி மிக இலகுவாக தனது தலைமைகளுக்குக் கட்டுப்படும் சமூகமே எந்த விசாரணையும், ஆட்சேபனையுமின்றி தனது தலைமைகளைக் கைவிடவும் செய்யும்.” (பக்கம் – 15)

இக்கடைசி அவதானக் குறிப்பு மிகப் பெறுமதியானது. சமகால அரபு வரலாறு, அது சரியென்பதற்கு சான்று பகர்கிறது. 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து எத்தனை ஆட்சியாளர்கள் அரபு உலகில் இராணுவப் புரட்சி மூலம் வீழ்ந்தார்கள். அப்போது மக்கள் ஒரு சொட்டுக் கண்ணீரும் வடிக்கவில்லை. உள்ளங்களால் ‘ஐயோ’ என்று கூறவுமில்லை. தமக்கு எத்தொடர்புமற்ற தூர நாடொன்றில் நடந்த ஒரு சிறிய நிகழ்வு என்பது போன்று அதனுடன் உறவாடினார்கள். புரட்சியில் வீழ்த்தபட்டவருக்கு ஏற்கனவே எவ்வாறு பணிந்து கட்டுப்பட்டார்களோ அவ்வாறே புதிய இராணுவப் புரட்சியாளனுக்கும் இலகுவாகக் கட்டுப்பட்டுப் போனார்கள்.

இராணுவப் புரட்சிகளின் வெற்றியென்பது, புரட்சியாளர்கள் சாதாரணமாக கவனத்திற் கொள்ளும் புரட்சியின் போதான இராணுவப் பொறிமுறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பவற்றில் மட்டும் தங்கியிருப்பதில்லை.

– இதனை புத்தகத்தின் ஆசிரியர் விரிவாக விளக்கியுள்ளார் – இராணுவப் புரட்சியின் வெற்றி தங்கியிருப்பது அரசியல் அறிவு, சட்ட யாப்பு பற்றிய விழிப்புணர்வு என்பவற்றிலாகும். இவை புரட்சியை நடைமுறையில் கொண்டுசெல்வதற்கான ஷரத்துகளை விட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இக் கருத்தை நோக்கியே ஆசிரியர் வாசகர்களின் கவனத்தை ஈர்க்க முனைகிறார்.

கலாநிதி ஹம்மாத் இக் கருத்தை மீண்டுமொருமுறை புரட்சிக்கான “திட்டமிடல்” – என்ற அத்தியாயத்தில் விளக்குகிறார். வெற்றிகரமான இராணுவப் புரட்சிக்கான திட்டங்களில் ஒன்று அரசியற் கட்சிகள், இயக்கங்களை நடுநிலை வகிக்கும் நிலைக்குக் கொண்டு வருவதாகும். குறிப்பாக புரட்சி உறுதியற்ற நிலையில் இருக்கும் ஆரம்ப மணி நேரங்களில் இது முக்கியமாகும். ஏனெனில் இக் கட்சிகளும், இயக்கங்களும் ஆட்டங் கண்டு கொண்டிருக்கும் புரட்சியாளர்களது அதிகாரத்திற்கு சவால் விடும் வகையில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை கொண்டு செல்லின் அது புரட்சி செயற்பாட்டைக் கடுமையாகப் பாதிக்கும். (பக்கம் – 41)

அரசியல் விழிப்புணர்வு, அரசியல் சட்டயாப்பு பற்றிய சிந்தனை முதிர்ச்சி என்பவையே இராணுவப் புரட்சிகளுக்கெதிரான அதி முக்கிய தடைகளாகும். பழம் பெரும் ஜனநாயக சமூகங்களில் இராணுவப் புரட்சிகளுக்குத் தடையாக இருப்பது சிவில் அதிகாரத்தை கவிழ்த்து விடலுக்கான இராணுவத்தின் இயலாமையல்ல. அந் நாடுகளின் – இராணுவம் உட்பட – சமூகங்களில் காணப்படும் அரசியல் அறிவு நிலையே – இராணுவப் புரட்சிக் கெதிரான உண்மையான தடையாகும். அந் நாடுகளின் சமூகங்கள் சட்ட ரீதியான அரசிற்கெதிரான இராணுவப் புரட்சிகளை சட்ட ஒழுக்கப் பின்னணியில் அங்கீகாரம் பெற்றதாகக் காண்பதில்லை. துருக்கியில் தோல்வியுற்ற இராணுவப் புரட்சி சமூகத்தின் அரசியல் அறிவு முதிர்ச்சியையே இவ்வகையில் காட்டுகிறது. இது அரசுகளுக்கு இராணுவப் புரட்சிகளுக் கெதிரான இயல்பான சொந்தத் தற்காப்பைக் கொடுக்கிறது.

இராணுவப் புரட்சிக் கெதிரான மக்கள் எழுச்சி, துருக்கிய படையின் செயலூக்கத் தலைமைகளின் புரட்சிக் கெதிரான நிலைப்பாடு, பொலிஸ், விஷேட இராணுவப் பிரிவினர் புரட்சியை ஒழிப்பதில் மேற்கொண்ட முயற்சிகள், ஆரம்பத்திலேயே அரசியல் சக்திகள் அனைத்தும் புரட்சியை கடுமையாகக் கண்டித்து நின்றமை போன்ற துருக்கியில் நாம் கண்ட அனைத்துவிடயங்களும் சமூக நாட்டத்தையும், ஆழ்ந்த அரசியல் அறிவு விழிப்புணர்வையும் காட்டுகின்றன. அது வெறுமனே மேலோட்டமான அரசியல் நிலைப்பாட்டையோ, ஜனாதிபதி தையிப் ஒர்தகோனின் ஆளுமை மீதான ஈடுபாட்டையோ காட்டவில்லை. ஏனெனில் இராணுவப் புரட்சிக்கு எதிராக நின்ற சிலர் தையிப் ஒர்தகோனின் கடும் அரசியல் எதிரிகள்.

அரபு எதிர்ப் புரட்சியின் பெயரால் பேசுவோர், அல்லது 20 நூற்றாண்டின் ஆரம்ப கால பிரிவுகளில் நிலவிய அரபு – துருக்கிய பிரிவனைவாத போராட்டங்களில் இன்னும் சிறையுண்டிருக்கும் அரபு தேசிய வாதிகள் சிலர் மதிப்பது போன்று நான் தையிப் ஒர்தகோனின் தலைமையைக் குறைத்து மதிப்பிட இங்கே முயலவில்லை. சந்தேகமின்றி ரஜப் தையிப் ஒர்தகோன் எமது காலத்தின் மிகப் பெரிய அரசியல் தலைவர்களில் ஒருவர். அவரது வீரவுணர்வுக்கும், முன்னின்று செயற்படும் போக்கிற்கும், அபாயங்களில் தயக்கமின்றி இறங்கிவிடும் உணர்விற்கும் நடந்த இராணுவப் புரட்சியை துவங்கும் போதே அடித்து வீழ்த்துவதில் ஒரு பங்கு உண்டு. அவருக்கு அரபு மக்களுக்கு மத்தியில் இருக்கும் மிகப் பெரும் ஆதரவிற்குக் காரணம் மார்க்கம், வரலாறு, புவியியல் நிலை என்ற உறவுகளால் அரபிகளை இணைக்கும் அவரது நாட்டின் மீள் உருவாக்கப் பணிகளுக்கான போராட்டத்தின் உதாரணமாக அவர் திகழ்கிறார் என்பதாகும்.

அத்தோடு துருக்கி அவரது ஆட்சியின் கீழ் சுதந்திரத்திற்கான கலங்கரை விளக்காகத் திகழ்கிறது. சொந்த நாடு இடம் கொடுக்கா அரபு சுதந்திரத் தலைமைகளுக்கு பாதுகாப்புத் தளமாகவும் அது உள்ளது. இவை உண்மையே என்றாலும் கூட துருக்கியில் தோல்வியுற்ற இராணுவப் புரட்சியின் போது நிகழ்ந்தவை ஒர்தகோன் அல்லது எந்தவொரு ஆட்சித் தலைவன் பங்களிப்பையும் விட ஆழமானது. அது அரசியல் அறிவு, விழிப்புணர்வின் வளர்ச்சியைக் காட்டுவதாகும்.

இக் கருத்தை கீழே விளக்குவோம். அரசியல் அறிவு முதிர்ச்சியுற்ற சமூகங்களில் மக்கள் ஆட்சியாளர்கள் யார் என்பதில் கவனம் செலுத்துவதை விட அதிகமாக ஆட்சிக் கொள்கைகளிலேயே கவனம் செலுத்துவர். ஆட்சித் தலைவர்களின் சாணக்கியத்தை விட ஆட்சி அமைப்பின் நுணுக்கத்திலேயே அதிகம் கவனம் செலுத்துவர். குறிப்பிட்டதொரு அரசியல் தரப்பு வெற்றிபெறுதலை விட -அது தமது கட்சி, கோஷ்டியினராயினும் சரியே- அனைவருக்கும் நீதியையும், சுதந்திரத்தையும் வழங்கக் கூடிய வகையில் ஒரு அரசியல் யாப்பைக் கட்டியெழுப்புவதே மிக முக்கியமானது என உணர்வர். இந்த உணர்வால் மக்களது உள்ளங்களில் அரசியல் ஒழுக்க ஒப்பந்தம் தெளிவாகும். எதிரி சர்வாதிகாரமே என்ற விளக்கமும் அவர்களது அறிவுகளில் ஆழமாகும். அனைவருக்கும் நீதியையும், சுதந்திரத்தையும் உத்தரவாதப் படுத்தும் அரசியல் யாப்பின் கீழ் இயங்கும் நிலையில் ஒரு அரசியல் எதிரி அவனோடுள்ள கருத்து வேறுபாடு எவ்வளவு பாரியதாயினும் முக்கியமானதொரு பிரதான எதிரியல்ல என்ற உண்மையையும் மக்கள் உணர்வர்.

ஆனால் அரசியல் விழிப்புணர்வும், அரசியல் அறிவும் மிக மேலோட்டமான சமூகங்களில் சுதந்திரத்திற்கும், சர்வாதிகாரத்திற்குமிடையிலான போராட்டம் தனி நபர்களுக்கிடையிலான அல்லது கோஷ்டிகளுக்கும், கட்சிகளுக்குமிடையிலான போராட்டமாகப் போய்விடும். அந்நிலையில் அனைவரையும் ஒருங்கிணைக்கும் கோட்பாடுகள் கட்சிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கும், கொள்கைவாத உணர்ச்சிபூர்வ நிலைகளுக்கும், தனி நபர் இச்சைகளுக்கும் சாதகமாக ஆகிப் போய்விடும். அரசியல் எதிரிகளுக்கு மத்தியிலான போட்டி இருப்பு நிலைக்கான யுத்தமாகவும் மாறிப் போய்விடும். இந்த நோய்வாய்ப்பட்ட அரசியல் அறிவு நிலை, அழிவு தேடித்தரும் சுய நல ஒழுக்க நிலைகள் சர்வாதிகாரிக்கு எவ்வளவு சிறந்த வாழ்வைக் கொடுத்து விடும்! கொஞ்சம் ஆசை காட்டல், பயமுறுத்தல், பிரச்சார உத்தி, உண்மைகளைத் திரிபு படுத்தி வெளியிட்டுக் குழப்பி விடல் என்பவற்றின் ஊடாக கப்பலை சர்வாதிகாரி பிடித்து நிற்பான். அதில் பிரயாணப்படும் சுய நலப் பேய் பிடித்து ஆட்டும் முட்டாள்களை அவர்களது அழிவுக்கே அவன் இட்டுச் செல்வான். சிலரை நெருக்குதல், சிலரைத் தூரமாக்கல் செயற்பாட்டை அவன் மேற் கொண்டால் அதனூடான அவனது இலக்கு ஒருவரோடொருவரை மோதவிடலும், கூட்டுக் கருத்தொன்றைக் கட்டியழுப்பாது தடுத்தலுமேயாகும். இதன் மூலமே “பிர்அவ்ன் பூமியில் மேலதிகாரம் கொண்டான். மக்களை கோஷ்டிகளாகப் பிளவு படுத்தினான்” (ஸூரா கஸஸ் 28:4) என்ற பிர்அவனியப் போக்கை கடைப்பிடித்து அவர்களை அடிமைப் படுத்திக் கொள்ளல் அவனுக்கு இலகுவாக முடியுமாகும். அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதுவும் சாத்தியமாகும்.

இந்த அரசியல் அறிவு, அரசியல் ஒழுக்க ஏற்றத் தாழ்வுக்கு ஜனாதிபதி முஹம்மத் முர்ஸி மீது வெற்றிகரமாக நடந்தேறிய புரட்சியும், தையிப் ஒர்தகோன் முன்னே தோற்றுப் போன புரட்சியும் சிறந்த உதாரணமாகும். இரண்டு நிகழ்வுகளையும் ஒப்பிடும் போது இதனைப் புரிந்து கொள்ள முடியும். இரு புரட்சிகளுக்குமிடையே புவியியல் ரீதியாகவும், மூலோபாய திட்டமிடல் வகையிலும், சிந்தனை ரீதியாகவும் கூடப் பல ஒற்றுமைகள் உள்ளன. இரு நாடுகளுமே மத்திய தரைக் கடற் பிராந்தியத்திலுள்ள பெரும் முஸ்லிம் நாடுகள். அமெரிக்க ஆதிக்க மூலோபாய ஒழுங்கைப் பொறுத்தவரையிலும் இரண்டும் அடிப்படை நாடுகள். இரு நாடுகளிலும் அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டுக்கும் எதிரிகளாக அமைந்த இஸ்லாமிய சக்திகள் ஆட்சிக்கு வந்தன. இரு தலைவர்களும் – ஒர்தகோன், முர்ஸி – தூய தேர்தல் மூலம் ஏறத்தாழ ஒரே அளவான வாக்குகளுடன் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தனர். இரு நாடுகளின் சட்ட ரீதியான ஆட்சிக்கெதிராக அந் நாடுகளின் இராணுவ அதிகாரிகள் ஊடாக இராணுவப் புரட்சியொன்றை கொண்டுவர அமெரிக்காவும், இஸ்ரேலும் உடன்பாட்டுடன் செயற்பட்டன என்பதற்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன.

ஆனால் துருக்கியிலும், எகிப்திலும் இன்று காணப்படும் அரசியல் அறிவு நிலை அடிப்படையிலேயே வேறுபடுகிறது என்பது தெளிவானது. ஒர்தகோன் நீண்டதொரு அரசியல் வழியில் ஓடி, அதிகாரத்திற்கு வந்தார். இன்று அவர் அரசியல் அறிவு முதிர்ச்சியுற்ற, அரசியல் யாப்பு அடிப்படையிலான நிறுவனங்கள் பலம் பெற்ற நாட்டின் தலைவராக உள்ளார். கொள்கை ரீதியாக, இன ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் கருத்துவேறுபாடுகள் பெரியளவு காணப்பட்ட போதிலும் அங்கு அழிவு தரும் அரசியல் சுய நலம் பொது கருத்தின் நலனை உத்தேசித்துப் பின்வாங்கியுள்ளது.

மறு பக்கத்தால் முர்ஸி மக்கள் எழுச்சியுடன் திடீரென ஆட்சியில் அமர்த்தப்பட்டார். மதச் சார்பற்ற அறிவு ஜீவிகளை இராணுவத் தலைமை பல தசாப்தங்களாக அந்நாட்டில் அடிமைப் படுத்தியிருந்தது. அவர்களின் முதுகில் ஏறியே சீர்கேடுகளையும், சர்வாதிகாரத்தையும் அது நிகழ்த்திக் காட்டியிருந்தது. விளைவாக அப் புத்திஜீவிகள் அரசியல் அடிமைத் தனத்திற்கும், அரசியல் விக்கிரக ஆராதனைக்குமே பழக்கப்பட்டுப் போயிருந்தனர். அந்த அணியில் வெறுக்கத்தக்க நான் என்ற கர்வமும், சுய நலமும் பரவிப் போயிருந்தது. இதன் விளைவாக அவர்களில் ஒரு சாரார் அற்ப கட்சி நலனுக்காக அல்லது இராணுவத்தின் சாப்பாட்டு மேசையிலிருந்து எச்சிலாக விழும் ஒரு அரசியற் பதவிக்காக தமது அரசியற் போட்டியாளர்களான இஸ்லாமிய வாதிகளை அறுத்துப் பலியிடவும் தயாராக இருந்தனர்.

எகிப்தின் இஸ்லாமிய சக்திகள் அரசியற் சுய நலன், கர்வம், தூரநோக்கின்மை என்பவற்றைவிட்டுத் தூரமாக இருந்தார்கள் எனக் கூறவும் முடியாது. அவர்கள் புரட்சிக் குடையின் கீழிருந்த தமது அரசியல் போட்டியாளர்களை எதிரிகளாகப் பார்த்து முட்டாள் தனமாகவும், நுணுக்கமற்றும் புரிந்துணர்வுக் கையை புரட்சியின் எதிரிகளாகிய இராணுவத் தலைமை நோக்கி நீட்டினார்கள். எனினும் இஃஹ்வான் அல் முஸ்லிமூன் இயக்கத்தினர் விட்ட தவறுகளுக்கும் அவர்களது அரசியல் எதிரிகள் விட்ட தவறுகளுக்குமிடையே ஒழுக்க ரீதியாகப் பாரிய வேறுபாடுகள் இருந்தன. எகிப்தின் இஃஹ்வான்கள் விட்ட தவறுகள் கணிப்பீட்டிலான குறைபாடுகள். அரசியல் முட்டாள்தனம். ஆனால் அடுத்தவர்களின் தவறுகளோ புரட்சியின் கொள்கைகளுக்குத் துரோகமாகவும் அதன் ஒழுக்க நிலைகளுக்கு முற்றிலும் மாற்றமாக அமைந்தவையுமாகும். எனினும் இரு சாராரும் இங்கே விளக்கும் அடிப்படைப் பிரச்சனையில் பங்கு கொள்கிறார்கள். அவையே அரசியல் அறிவு, விழிப்புணர்ச்சியில் காணப்பட்ட பலவீனம். கொள்கைகளை விட தம் நிகழ்ச்சி நிரல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தமை எதிர்ப்பு நிலைகள், நட்பு என்ற பகுதியில் முதன்மைப் படுத்தலில் கோளாறு காணப்பட்டமை என்பவையாகும்.

துருக்கியின் சமகால வரலாற்றின் பிரிகோடாக அமைந்த ஓர் அபாயகரமான காலக் கட்டத்தில் எழுந்த அபாயகரமானதொரு இராணுவப் புரட்சியை அடித்து ஒழித்த வீரமிக்க மக்கள் எழுச்சி அரசியல் அறிவின் வளர்ச்சி நிலையையும், அரசியற் பெறுமானங்கள், சிந்தனைகளின் முதிர்ச்சியையும், துருக்கி அரசியல் யாப்பு நிறுவனங்களின் பலம் பெற்ற நிலையையும் காட்டுகிறது. ஆனால் எகிப்தின் இராணுவப் புரட்சிக்கு இலகுவில் மக்கள் பணிந்து போனமை எகிப்தில் குறிப்பாகவும், அரபுலகில் பொதுவாகவும் அரசியல் அறிவு, விழிப்புணர்வு இன்னும் நிறைய முதிர்ச்சியுற வேண்டியிருக்கிறது எனக் காட்டுகிறது.

நஹ்லா இயக்கத்தோடு டியூனிசியமதச் சார்பற்ற அறிவு ஜீவிகள் உறவாடியமையும் எகிப்தின் நிலையை ஒத்ததாகும். இயக்கத்திற்கு எதிராக அவர்கள் முறையற்ற கீழ்தர படிப்படியாக அழிவைக் கொண்டு வரும் போராட்டமொன்றைக் கொண்டு சென்றார்கள். நஹ்லாவின் தலைமை, கட்சி நலனைவிட புரட்சியின் நலனை மேலாகக் கொண்டு மிகவும் நுணுக்கமானதொரு முடிவை எடுத்திருக்காவிட்டால் டியூனிசியப் புரட்சியும் அழிந்திருக்கும். எல்லோரினது தலைகள் மீதும் புரட்சிக் கட்டிடம் விழுந்து நொறுங்கியிருக்கும்.

இதே கருத்தை எமனியப் புரட்சிக்கு ஈரானின் தூண்டுதலால் ஹூதியூன் நிகழ்த்திய துரோகத்திற்கும் சொல்லலாம். அவர்கள் தமது முன்னால் எதிரி அலி அப்துல்லாஹ் ஸாலிஹுடன் கைகோர்த்தார்கள். ஆனால் எமனியப் புரட்சி அவர்கள் வேண்டும் அவர்களது நலன்களைப் பெற்றுத் தந்திருக்கும். எல்லோருக்கும் இடமளிக்கும் சுதந்திர ஜனநாயக அரசின் கீழ் அவர்கள் அவற்றைப் பெற்றுக் கொண்டிருக்கலாம்.

சிரியாவின் மிக முக்கிய நகர்கள் சில புரட்சியின் ஆரம்ப நிலைகளிலேயே ஒன்றிணையாமல் தயங்கித் தயங்கி நின்றமையையும் இங்கு உதாரணமாகச் சொல்லலாம். அந்நியைலில் டமஸ்கஸின் இரத்த வெறி பிடித்த அவ்வாட்சியாளன் நாட்டைப் பகுதி பகுதியாக அழிப்பது சாத்தியமாகியது.

அவ்வாறே லிபியப் புத்திஜீவிகள் கடாபியின் அரசின் அழிவுக்கு மேல் ஒரு ஜனநாயக அரசைக் கட்டியெழுப்புவதில் எதிர் கொள்ளும் தடைகளும் இத்தகையவையே. அனைத்து அரபுப் புரட்சிகளும் அனுபவித்ததுவும், தொடர்ந்து அனுபவித்துவருவதுவும் அரசயில் சுய நலமும், கர்வ உணர்வுமாகும்.

துரோகமிக்க இராணுவப் புரட்சியைத் தோற்கடித்து சர்வாதிகாரம், உள் நாட்டுப் போரை விட்டு நாட்டைக் காப்பாற்றிய துருக்கிய சமூகத்தின் வீர எழுச்சியால் அரபிகள் கற்க வேண்டிய பாடம் ஏதுமிருப்பின் அது:

அரசியற் சுயநலம், கர்வ நிலை, என்பதிலிருந்து விடுதலை தரும், கட்சி நிகழ்ச்சி நிரலை விட அரசியற் பெறுமானங்களை மேலாகக் கொள்ளும், கட்சிகளின் எதிர் பார்ப்புகள், ஆட்சியாளர்களின் மனோ இச்சைகளை விட சமூக நாட்டத்தையும், பொது நலனையும் மேலாகக் கொள்ளும் புதிய அரபு அரசியல் அறிவு விழிப்புணவைக் கட்டியெழுப்புவதன் அத்தியாவசியத்தை வலியுறுத்துவதாகும் (MAM Mansoor)

Home             Sri Lanka Think tank-UK

No comments:

Post a Comment